இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை அடியார்கள் வேலைக் கையில் ஏந்திய பிள்ளையாக போற்றித் துதித்து வருகின்றார்கள். ஆரம்பகாலத்தில் வேலைக்கைப் பிள்ளை என அழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் இந்த பெயர் மருவி வேலைக்கைப் பிள்ளையார் என பின்னாளில் மாற்றம் அடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
விநாயகப் பெருமானுடைய நாமத்தை (பிள்ளையார்) தம்பியாரான முருகப்பெருமான் பெற்றுக்கொண்டமையும் அதுவே ஆலயத்தின் பெயராக நிரந்தரமாகவே நிலைபெற்று விட்டமையும் ஒரு சாதாரண விடயமாக கருதி விட முடியாது. அதாவது வேலைக்கைப் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டமையானது ஓர் அற்புத நிகழ்வுடன் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஏதாவது அமானுஷ்யமான காரணத்துடன் தொடர்புடையதாகவோ கருதுவதற்கு இடமுண்டு என சமய ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றது.
இந்த ஆலயம் குறிப்பிட்ட ஒரு பரம்பரையினருக்கு சொந்தமானதாக இருக்கின்றது. இந்தப் பரம்பரையினரின் வழித்தோன்றலாக வருபவர்களே ஆலயத்தை பராமரித்து நிர்வாகித்து வருகின்றார்கள்.இந்தப் பரம்பரையினரின் முன்னோர் ஒருவரால்தான் சிறியதாக ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாற்று தகவல். கடந்த கால போர் சூழ்நிலைகலினாலும், அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வு போன்ற காரணங்களினாலும் ஆலய வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட நூல்கள், எட்டு சுவடிகள் போன்ற பல ஆவணங்களை இழக்க வேண்டிய நிலைமைஏற்பட்டமையானது வருத்தத்திற்குரியது.
இந்த ஆலயத்தை பரிபாலித்து வரும் பரம்பரையினரின் முன்னோர்கள், அடியார்களின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் காலத்திற்கு காலம் புனருத்தரான வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆலய கட்டட பணிகளும், அதன் வடிவமைப்பும் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தன.
இந்த நிலையில் 1910ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஆலய பரம்பரை உரிமையாளர்களுல் ஒருவரும், கோட் முதலியாராக பணியாற்றி வந்தவருமான திரு தம்பையா சிவக்கொழுந்து தலைமையில் ஆலய பரிபாலன செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவர் தனது குடும்பத்தினருடனும், கிராமத்திலுள்ள அடியார்களுடனும் இணைந்து கட்டட விரிவாக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். இதன் பயனாக ஆலயத்தின் முன் மண்டபங்கள் தோற்றம் பெற்றன. நித்திய பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து, அலங்கார உற்சவங்களும்நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து கொடிஸ்தம்பம் அமைக்கப்பட்டு மகோற்சவ பெருவிழா தொடப்பட்டது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கட்டுத் தேரில் எழுந்தருளி வீதிவலம் வந்து அடியார்களுக்கு காட்சி கொடுப்பார். தீர்த்தொட்சபமும் இடம்பெற்றது.
திரு தம்பையா சிவக்கொழுந்து அவர்களது மறைவுக்கு பின்னர், அவரது புதல்வர்களான திரு முத்துக்குமாரசாமி, திரு ராஜேந்திரம் ஆகியோர் இணைந்து ஆலய பரிபாலன செயல்பாடுகளை முன்னெடுத்தனர். ஆலயத்தின் வளர்ச்சியிலும் இவர்கள் பெரிதும் பங்கெடுத்தனர். 1975 .07.02ஆம் திகதியன்று திரு முத்துக்குமாரசாமி காலமானார். இதன்பின் அவரது புதல்வரான திரு.சிவகுமாரன் ஏற்கனவே ஆலய பரிபாலனத்தை மேற்கொண்டு வந்த திரு ராஜேந்திரம் அவர்களுடன் இணைந்து ஆலயத்தை நிர்வாகித்து வந்தார். 1995ஆம் ஆண்டு திரு.ராஜேந்திரம் அவர்களது மறைவின் பின் அவரது புதர்வர்களான நீதவான் வசந்தசேனன் அவர்களும் பின் அவரது திரு வசந்தகுமார் அவர்களும், திரு சிவகுமாரன் அவர்களுடன் இணைந்து ஆலய பரிபாலனத்தை முன்னெடுத்தனர்.
திரு வசந்தகுமார் அவர்களின் மறைவைத் தொடர்ந்து அவரது புதல்வர் திரு ராஜ் அவர்கள் ஆலய நிர்வாகத்தில் இணைந்து கொண்டார். இப்போது திரு சிவகுமாரன், திரு வசந்தசேனன், திரு ராஜ் ஆகிய மூவரும் அறங்காவலர்களாகவிருந்து ஆலயத்தை பராமரித்து நிர்வகித்து வருகின்றார்கள். இவர்களது பரிபாலன செயல்பாடுகளுக்கு உறவினர்களும், உற்சவ உபயகாரர்களும் முருகப்பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட மானிப்பாய் பிரதேசத்து அடியார்களும் இணைந்து ஆலய வளர்ச்சிக்கு தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கி வருவது சிறப்பிற்குரிய விஷயமாகும்.
இந்த ஆலயத்தில் சிவஸ்ரீ நடராஜக்குருக்கள் சுப்பிரமணிய குருக்கள் பிரதம குருவாக பணியாற்றி வருவதுடன் நித்திய நைமித்தியக் கருமங்களையும் மேற்கொண்டு வருகிறார். இங்கு தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை மணி 6.30, நண்பகல் மணி 12 ,மாலை மணி 4.45 ஆகிய நேரங்களில் நித்திய பூஜை வழிபாடுகள் இடம் பெறுகின்றன.