• info@velakaimurugan.com
  • +94 76 492 2873

வேலைக்கைப் பிள்ளையார்

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள வலிகாமம் தென்மேற்கு(சண்டிலிப்பாய்) பிரதேச செயலகப் பிரிவின் நிர்வாகத்திற்கு உட்பட்டது மானிப்பாய் பிரதேசம். யாழ் நகரத்தத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள மானிப்பாய் பிரதேசத்தில் பல சைவத்திருக்கோயில்கள் காட்சி தருகின்றன.இவற்றுள் ஒன்றுதான் வேலைக்கைப் பிள்ளையார் ஆலயம். மானிப்பாய் தெற்கு லோட்டன் வீதியில்,139 ஆம் இலக்க கிராம சேவை அலுவலர் பிரிவில் இந்த ஆலயம் உள்ளது.

150 வருடங்களுக்கும் மேலான வரலாற்றுப் பெருமை கொண்டதாக விளங்குகிறது வேலைக்கைப் பிள்ளையார் ஆலயம். இங்கு பிள்ளையார் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டுவருகின்ற போதிலும், ஆலயத்தில் முருகப்பெருமானே மூல மூர்த்தியாக வீற்றிருந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

இங்கு எழுந்தருளியிருக்கும் முருகப் பெருமானை அடியார்கள் வேலைக் கையில் ஏந்திய பிள்ளையாக போற்றித் துதித்து வருகின்றார்கள். ஆரம்பகாலத்தில் வேலைக்கைப் பிள்ளை என அழைக்கப்பட்டதாகவும் காலப்போக்கில் இந்த பெயர் மருவி வேலைக்கைப் பிள்ளையார் என பின்னாளில் மாற்றம் அடைந்ததாகவும் சொல்லப்படுகின்றது.

விநாயகப் பெருமானுடைய நாமத்தை (பிள்ளையார்) தம்பியாரான முருகப்பெருமான் பெற்றுக்கொண்டமையும் அதுவே ஆலயத்தின் பெயராக நிரந்தரமாகவே நிலைபெற்று விட்டமையும் ஒரு சாதாரண விடயமாக கருதி விட முடியாது. அதாவது வேலைக்கைப் பிள்ளையார் என்ற பெயர் ஏற்பட்டமையானது ஓர் அற்புத நிகழ்வுடன் சம்பந்தப்பட்டதாகவோ அல்லது ஏதாவது அமானுஷ்யமான காரணத்துடன் தொடர்புடையதாகவோ கருதுவதற்கு இடமுண்டு என சமய ஆய்வாளர்களால் சொல்லப்படுகின்றது.

இந்த ஆலயம் குறிப்பிட்ட ஒரு பரம்பரையினருக்கு சொந்தமானதாக இருக்கின்றது. இந்தப் பரம்பரையினரின் வழித்தோன்றலாக வருபவர்களே ஆலயத்தை பராமரித்து நிர்வாகித்து வருகின்றார்கள்.இந்தப் பரம்பரையினரின் முன்னோர் ஒருவரால்தான் சிறியதாக ஆலயம் ஸ்தாபிக்கப்பட்டு வழிபாடு ஆரம்பிக்கப்பட்டது என்பது வரலாற்று தகவல். கடந்த கால போர் சூழ்நிலைகலினாலும், அதனால் ஏற்பட்ட இடப்பெயர்வு போன்ற காரணங்களினாலும் ஆலய வரலாற்றுடன் சம்பந்தப்பட்ட நூல்கள், எட்டு சுவடிகள் போன்ற பல ஆவணங்களை இழக்க வேண்டிய நிலைமைஏற்பட்டமையானது வருத்தத்திற்குரியது.

இந்த ஆலயத்தை பரிபாலித்து வரும் பரம்பரையினரின் முன்னோர்கள், அடியார்களின் ஆதரவுடனும் ஒத்துழைப்புடனும் காலத்திற்கு காலம் புனருத்தரான வேலைகளை மேற்கொண்டு வந்துள்ளனர். இதனால் ஆலய கட்டட பணிகளும், அதன் வடிவமைப்பும் படிப்படியாக வளர்ச்சி பெற்று வந்தன.
இந்த நிலையில் 1910ஆம் ஆண்டு வைகாசி மாதத்தில் ஆலய பரம்பரை உரிமையாளர்களுல் ஒருவரும், கோட் முதலியாராக பணியாற்றி வந்தவருமான திரு தம்பையா சிவக்கொழுந்து தலைமையில் ஆலய பரிபாலன செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இவர் தனது குடும்பத்தினருடனும், கிராமத்திலுள்ள அடியார்களுடனும் இணைந்து கட்டட விரிவாக்கத்திற்கான ஏற்பாடுகளை செய்தார். இதன் பயனாக ஆலயத்தின் முன் மண்டபங்கள் தோற்றம் பெற்றன. நித்திய பூஜை வழிபாடுகளுடன் தொடர்ந்து, அலங்கார உற்சவங்களும்நடத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அவை வெற்றிகரமாக நிறைவேற்றி வைக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கொடிஸ்தம்பம் அமைக்கப்பட்டு மகோற்சவ பெருவிழா தொடப்பட்டது. முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதராக கட்டுத் தேரில் எழுந்தருளி வீதிவலம் வந்து அடியார்களுக்கு காட்சி கொடுப்பார். தீர்த்தொட்சபமும் இடம்பெற்றது.

திரு தம்பையா சிவக்கொழுந்து அவர்களது மறைவுக்கு பின்னர், அவரது புதல்வர்களான திரு முத்துக்குமாரசாமி, திரு ராஜேந்திரம் ஆகியோர் இணைந்து ஆலய பரிபாலன செயல்பாடுகளை முன்னெடுத்தனர். ஆலயத்தின் வளர்ச்சியிலும் இவர்கள் பெரிதும் பங்கெடுத்தனர். 1975 .07.02ஆம் திகதியன்று திரு முத்துக்குமாரசாமி காலமானார். இதன்பின் அவரது புதல்வரான திரு.சிவகுமாரன் ஏற்கனவே ஆலய பரிபாலனத்தை மேற்கொண்டு வந்த திரு ராஜேந்திரம் அவர்களுடன் இணைந்து ஆலயத்தை நிர்வாகித்து வந்தார். 1995ஆம் ஆண்டு திரு.ராஜேந்திரம் அவர்களது மறைவின் பின் அவரது புதர்வர்களான நீதவான் வசந்தசேனன் அவர்களும் பின் அவரது திரு வசந்தகுமார் அவர்களும், திரு சிவகுமாரன் அவர்களுடன் இணைந்து ஆலய பரிபாலனத்தை முன்னெடுத்தனர்.

திரு வசந்தகுமார் அவர்களின் மறைவைத் தொடர்ந்து அவரது புதல்வர் திரு ராஜ் அவர்கள் ஆலய நிர்வாகத்தில் இணைந்து கொண்டார். இப்போது திரு சிவகுமாரன், திரு வசந்தசேனன், திரு ராஜ் ஆகிய மூவரும் அறங்காவலர்களாகவிருந்து ஆலயத்தை பராமரித்து நிர்வகித்து வருகின்றார்கள். இவர்களது பரிபாலன செயல்பாடுகளுக்கு உறவினர்களும், உற்சவ உபயகாரர்களும் முருகப்பெருமான் மீது தீவிர பக்தி கொண்ட மானிப்பாய் பிரதேசத்து அடியார்களும் இணைந்து ஆலய வளர்ச்சிக்கு தேவையான உதவிகளையும், ஒத்துழைப்பையும் ஆதரவையும், ஆலோசனைகளையும் வழங்கி வருவது சிறப்பிற்குரிய விஷயமாகும்.
இந்த ஆலயத்தில் சிவஸ்ரீ நடராஜக்குருக்கள் சுப்பிரமணிய குருக்கள் பிரதம குருவாக பணியாற்றி வருவதுடன் நித்திய நைமித்தியக் கருமங்களையும் மேற்கொண்டு வருகிறார். இங்கு தினமும் மூன்று கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. காலை மணி 6.30, நண்பகல் மணி 12 ,மாலை மணி 4.45 ஆகிய நேரங்களில் நித்திய பூஜை வழிபாடுகள் இடம் பெறுகின்றன.

இங்கு நித்திய பூஜை வழிபாடுகள் மற்றும் வருடாந்த மகோற்சவ பெருவிழா என்பவற்றிற்கு மேலதிகமாக மாதாந்தம் சிறப்பு பூஜை வழிபாடுகளும் இடம் பெற்று வருகின்றன. தைப்பொங்கல், தைப்பூசம், சித்திரைப் புத்தாண்டு, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், திருவெம்பாவை, நால்வர் குருபூசை, நவராத்திரி,கந்த சஷ்டி, திருக்கார்த்திகை போன்ற சிறப்பு உற்சவ நாட்களில் விசேட அபிஷேகமும், நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் ஆறு அபிஷேகமும் இடம்பெறுவதை சிறப்பாக குறிப்பிடலாம்.

ஆலயத்தின் நுழைவாயில் கோபுரம் 2000 ஆவது ஆண்டில் மூன்றும் தளங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டது. கருவறையில் வள்ளி தெய்வானை சமேத முருக பெருமான் எழுந்தருளியிருக்கிறார். விநாயகர்,நடராஜர்,பழனி ஆண்டவர், ஆறுமுக சுவாமி, சண்டேஸ்வரர், நவக்கிரகங்கள்,வைரவர், நாகதம்பிரான் ஆகிய பரிவார மூர்த்திகளுக்கு தனித்தனியான சிறு கோயில்கள் ஆலயத்தின் உள்வீதியில் அமைக்கப்பட்டு காட்சி தருவதுடன் வசந்த மண்டபம்,யாகசாலை என்பனவும் அமைக்கப்பட்டிருப்பதும் சிறப்பிற்குரியது.

ஆலய தேவைக்காக உள்வீதியில் ஒரு கிணறும், வெளி வீதியில் தீர்த்தக்கேணியும் இருக்கின்றன. பூஜை நேரத்தில் ஒலிப்பதற்காக ஆலயத்துடன் இணைந்த வகையில் உயர்ந்த மணிக்கோபுரம் ஒன்றும் கம்பீரமாக காட்சி தருகின்றது.சுற்றுமதிலுடன் அமைந்த உள்வீதி மற்றும் விசாலமான வெளி வீதி கொண்டதாக ஆலய அமைவிடம் சிறப்பு பெறுகின்றது. ஆலயத்தின் வெளியே வடக்கு வீதியுடன் இணைந்த வகையில் பூந்தோட்டமும் உண்டு.

இங்கு வருடாந்த மகோற்சவம் சித்திரை மாதத்து பூரணை தினத்தை தீர்த்தமாக கொண்டு நடைபெற்று வருகிறது. மகோற்சவம் பன்னிரண்டு நாட்கள் நடைபெறுவது வழக்கம். முதல் நாளன்று கொடியேற்ற திருவிழாவும் ஏழாவது நாளன்று மஞ்சத் திருவிழாவும் பதினொராவது நாளன்று சப்பர திருவிழாவும் பன்னிரெண்டாவது நாளன்று காலையில் தேர் திருவிழாவும், மாலையில் தீர்த்தத் திருவிழாவும், இரவு கொடியிறக்க திருவிழாவும் இடம் பெற்று வருகின்றது. தேர்திருவிழாவின் போது மூன்று தேர்கள் வீதிவலம் வருவது வழக்கம். விநாயகப் பெருமான், வள்ளி,தெய்வயானை, சமேத முருகப்பெருமான், சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்திகள் தனித்தனியான தேர்களில் எழுந்தருளுவார்கள் பதின்மூன்றாவது நாளன்று இரவு பூங்காவன உற்சவம் நடைபெறும். மகோற்சவ காலத்தில் பகல் திருவிழாவின் பின் தினமும் அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருவதும் சிறப்பான நிகழ்வாகும்.

இந்த ஆலயத்தில் புணருத்தரான பணிகள் மேற்கொள்ளப்படுவதற்காக கடந்த ஏப்ரல் மாதத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டதால் இவ்வருடத்தில் ஆலய மகோற்சவம் நடைபெறவில்லை. புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றதன் பின்னர் கும்பாபிஷேகப் பெருவிழாவும், தொடர்ந்து அடுத்த வருடத்திலிருந்து மகோட்சவ திருவிழாவும் நடைபெறுவதற்கு முருகப்பெருமானின் திருவருள் கைகூடும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இதற்கு முன் ஆலயத்தில் புனருத்தரான பணிகள் மேற்கொள்ளப்பட்டு 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் திகதி அன்று மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.